அருள்மிகு நெல்லையப்பர்
அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில்
திருநெல்வேலி நகரம்

இறைவன்   அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்
இறைவி     அருள்தரும் காந்திமதி அம்மன்
தீர்த்தம்

பொற்றாமரை தீர்த்தம் ( சுவர்ணபுஷ்கரணி) கரிஉருமாறிதீர்த்தம் (சந்திரபுஷ்கரணி) வெளித்தெப்பக்குளம், சிந்துபுந்துறை உட்பட 32 தீர்த்தங்கள்

தலவிருட்சம்

மூங்கில் (தாவரவியல் பெயர் Bambusa arundinacea) (பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் – திருவிளையாடற்புராணம் அரி பிறந்தன்று தூணில், அரனும் வேயிலானான் – வில்லிபுத்தூராரின் வில்லிபாரதம்)

ஆகமம்

காமிக ஆகமம்

இசைக் கருவி

சாரங்கி

இத்திருத்தலத்தின் புராணப்பெயர்கள்
 

 

 

இறைவன் அம்மையோடு இங்கு வந்து உகந்து வீற்றிருப்பதால் பேர் அண்டம்
ஊழிக்கால முடிவில் எல்லாம் அழிந்தாலும் இத்தலம் மட்டும் அழியாததால் (அனவரதம்) பிரளயச்சிட்டம்
ஐந்து எழுத்து ஓசை எங்கும் நிறைந்ததால் தென்காஞ்சி
அம்பிகை தவம் செய்தும் சிவத்தை பூஜித்தும் இறைவனை மணம் முடித்ததால் சிவபுரம்
பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் ஆகியோர் இங்கு வந்து வணங்கி மகிழ்ந்து கொண்டிருப்பதால் திரிமூர்த்திப
இந்திரனின் ஐராவதம் யானை இங்கு வந்து வணங்கி நிற்பதால் இபபுரி
திருமால் ஆமை வடிவமாகி இங்கு சிவபூஜை செய்ததால் கச்சபாலயம்
பிரம்மன் சிவபூஜை இயற்றுவதால் பிரம்மபுரம்
மேலான தர்மங்கள் தொடர்ந்து நிலைபெற்று இருப்பதால் தரணிசாரம்
பிரம்மனுக்கு விஷ்ணு இங்கு அருள் புரிந்ததால் விண்டுதலம்
மேலான நற்கதி போகம் முதலியவற்றை இத்தலம் தருவதாலும் கம்பை நதி காமாட்சி அருளுவதாலும் தென்காஞ்சி காமகோட்டம்
சகல சித்திகளையும் அடைய வல்ல ஸ்தலம் ஆதலால் சகல சித்தி ஸ்தலம்

இத்திருத்தலத்தின் இதர பெயர்கள்

வேணுவனம், நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், தாருகாவனம், கீழவெம்பு நாட்டு குலசேகர சதுர்வேதி மங்கலம் (கோவில் கல்வெட்டுக்களில் குறிப்படிப்பட்டுள்ள பெயர்)

புராணச் சிறப்பு

 

 

திருநெல்வேலி தலம் விசேட சிறப்புடையது. அம்மை தான் படைத்த உலகத்தைக் காத்தற்பொருட்டு இறைவனை வேண்டித் தவம் இயற்றி, அவன் அருளை உலகம் பெறும்படிச் செய்தது வரலாறு.

உமாதேவி கயிலை மலையினின்றும் நீங்கி, இறைவனிடம் இருநாழி நெல் பெற்று, வேணுவனம் அடைந்து, முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்தது, கம்பை நதியின் அருகிலேயே இறைவனை நினைத்துத் தவமிருந்து, நெல்லை நாதனது திருவருட் கோலக்காட்சி எய்தி மணந்தருளியது, இறைவன் சிவனும் சக்தியுமாய் இலங்கி உயிர்களுக்குப் போக வாழ்வினை அளித்தருளி அம்மை அப்பனாய் எல்லா உயிர்களையும் காத்து அருள்வது, உயிர்களுக்குத் தவம் இயற்றும் முறையை அறிவுறுத்தற் பொருட்டு காந்திமதி அன்னை கமலபீட நாயகியாக காமாட்சி என்ற திருநாமத்துடன் தவக்கோலம் கொண்டது, உயிர்களோடு இரண்டறக் கலந்து சிவமாந்தமைப் பெருவாழ்வு எய்துவதை அறிவுறுத்தற் பொருட்டு அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி திருக்கல்யாண விழா நடத்தியது ஆகிய திருவிளையாடல்கள் நடைபெற்ற மேன்மையுடையது இத்தலம்.

 
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்

 

சிவபெருமானின் நிவேதனத்திற்காக வேதசர்மா எனும் அந்தணச்சான்றோர் பிச்சை எடுத்துவந்து உலர்த்தியிருந்த நெல்லை, எதிர்பாராது பெய்தமழை அடித்து சென்றுவிடுமோ என அஞ்சி இறைவனை இறைஞ்சிய போது, இறைவன் நெல்லை, நீர் அடித்துக்கொண்டு போகாமல் வேலியாக நின்று காத்தமையால், நெல்வேலி நாதர் எனப்பெயர் பெற்றார்.

இத்திருவிளையாடல் நடைபெற்ற இத்தலத்திற்கும் திருநெல்வேலி என்றும் பெயர் வந்தது.

‘என்னை யொருபொருட்டாக வித்திறஞ் செய்தே – அருளாற்
றுன்னீ யெங்கு மழையிருண்டு சொரிந்திடவு நனையாமற்
செந்நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாட்டாலுனக்கு
மன்னுபெயர் நெல்வேலி நாதனென்று வழங்கினனால்’

இறைவனிடம் சரண் புகுந்த உள்ளங்களே நெல், இறைவனிடம் சரண் புகுந்தால் பாவபெருமழை வந்தழிக்க முயன்றாலும், ஈசன் நம்மை காத்தருள்வார் என்ற பேருண்மையை இத்திருவிளையாடல் உணர்த்துகிறது.

 

 

வேணுவனத் திருவிளையாடல்

 

 

நான்மறைகளும் சிவபெருமானுக்கு நிழல் தரும் மரங்களாக இருக்க வரம் வேண்டின. எனவே வேதங்கள் திருநெல்வேலியில் மூங்கிலாய் இருக்க இறைவன் லிங்கமாய் அமர்ந்தான் என்பது தலபுராணம். மூங்கில் காட்டினூடே பாற்குடம் சுமந்து சென்ற அன்பனை இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடறி விட்டுப் பாலைத் தன்மேல் கவிழச் செய்து, அவனால் வெட்டுண்டு, காட்சி அருளியதால் வேணுவனநாதராக தோன்றிய பெருமையுடையது.

தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கிய கீர்த்தியுடைய கங்காளநாதரின் பிச்சாடன மூர்த்தி கோலமும் புகழ் உடையது. இந்திரத்துய்மன் என்னும் அரசனுக்குத் துருவாச முனிவர் இட்ட சாபம் நீங்க உதவிய ‘கரிஉருமாறி தீர்த்தம்’ அமையப்பெற்ற சிறப்புடையது. சைவ ஆகமங்கள் 28ல் காமிக ஆகமப்படி அமைந்த இத்திருக்கோயில் மிக்க அழகுடையதாகும்.

 

 

காலசம்ஹார மூர்த்தி ஸ்வதே கேதுவிற்கு எமபயம் ஒழித்த திருவிளையாடல்

 

ஸ்வேத கேது என்கிற அரசன் நெல்லையம்பதியை ஆண்டு, அனுதினமும் நெல்லையப்பரை பூஜித்து வந்தான். வாரிசு இல்லாது அவனது அந்திமக்காலம் நெருங்கியதை அறிந்து இறைவனது ஆலயத்திலே அமர்ந்து சிவபூஜை செய்து கொண்டிருந்தான். அப்போது காலன் அரசனை ஆட்கொள்ள அந்தப் பாசமானது இறைவன் மீதும் விழுந்தது. காலனை எதிர்த்தார் இறைவன்.  இறைவன் அரசனிடம், மனம் வருந்தி மாள வேண்டாம் என்றும் அரசன் இஷ்டப்பட்டு தானே முக்தியடையவும் இறைவன் அருள் பாலித்த திருவிளையாடல் இத்தலத்தில் நடந்தது. “கூற்றுதைத்த நெல்வேலி” என்கிற பெரியபுராண பாடல் (886) வரிகள் மூலம் சேக்கிழார் பெருமான் இந்நிகழ்வை பதிவு செய்துள்ளார். இத்திருக்கோயிலின் சுவாமி சந்நிதி முதலாம் திருச்சுற்றில் இந்த காலசம்ஹாரமூர்த்தியின் கோலம் புடைப்புச் சிற்பமாக சுப்பிரமணியர் சந்நிதி அருகில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திருவிளையாடல் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் பூரம், உத்திரம், ஹஸ்தம் ஆகிய மூன்று தினங்களில் சிவலிங்க பூஜை செய்து, பஞ்சமூர்த்திகளை ஒரே ரதத்தில் வைத்து திருவீதி உலாவரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

“இந்தவா றிரங்கிச் சுவேதமா
முனிவனிடம் புதறிருச் செவிபடலும்
நந்தணி குழையன் முந்த
முப்புரங்கண்டுங் கிடவுருத்தெழுவது போற்
சுந்தர மூலலிங் கத்தினூடு
தோன்றினன் வெகுளியுந் தோன்ற
வந்து முன்னின்ற வந்தகன் றன்னை
மார்புறக் காலினா லுதைத்தான்”

அப்பர், சம்பந்தர் போற்றும் காலாரிமூர்த்தியின் கதை இறைவனை அண்டினோர்க்கு மரண பயமில்லை என்பதை உணர்த்துவதாகும்.

திருக்கடையூரில் இறைவன் நிகழ்த்தியது, பிறக்கும்போதே இறப்பின் நாளை தெரிந்துகொண்டே பிறந்த இளைஞனுக்காய் காலனை உதைத்த திருவிளையாடல். ஆனால், இத்தலத்தில் இறைவன் நிகழ்த்தியது, முதுமையடைந்து உரிய காலத்தில் மரணம் சம்பவிக்க இருந்த பக்தனை மரண பயத்திலிருந்து விடுவித்து முக்தி அளித்த திருவிளையாடல். எனவே, திருக்கடையூரைக் காட்டிலும், அன்னை அறம் வளர்த்தவளாகி அரனை மணந்து அகத்திய முனிவருக்கு திருக்கல்யாண கோலம் காட்டிய இத்திருத்தலத்தில் திருமணம், சஷ்டிஅப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் மற்றும் ம்ருத்யுஞ்ஜய மஹா வேள்வி ஆகியவை செய்வது சாலச் சிறந்தது.

Copyrights © 2014 Arulmigu Swami Nellaiyappar Temple All Rights Reserved
Site design & Maintained by
Anna silicon