அருள்தரும் காந்திமதியம்மை உடனுறை நெல்லையப்பர் திருக்கோயிலின் வரலாற்றில் தாமிர சபை நடனம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. பஞ்ச சபைகளில் சிதம்பரம் பொற்சபையில் ஆனந்தத் தாண்டவமும், திருவாலங்காடு ரத்ன சபையில் ஊர்த்துவ தாண்டவமும், மதுரை வெள்ளியம்பலத்தில் சுந்தரத் தாண்டவமும், திருக்குற்றாலம் சித்திர சபையில் அசபா தாண்டவமும் புரிந்த எம்பெருமான் திருநெல்வேலி தாமிர சபையில் பிரம்ம தாண்டவம் எனப்படும் ஞானமா நடனம் செய்த காட்சியினை வேணுவன புராணம் அற்புதமாக எடுத்துரைக்கிறது.

மூர்த்தி, தீர்த்தம், தலப்பெருமை உடைய சைவம் தழைத்தோங்கும் திருநெல்வேலியில் தாமிரசபைதனிலே பெருமான் ஞானமயமான நடனம் செய்த காட்சியை ஞானமாதவத்தை உடைய சூதமுனிவன் எடுத்துரைக்கிறான். “மாய வாழ்வை அறுத்து வாழ்வளிக்கும் மனன்வனாகிய எம்பெருமான் திரிபுரம் எரித்து ஆடிய நடனத்திலும் உயர்ந்த நடனத்தை ஆடினார். செந்தமிழ்ப் பாடலுக்கு அரசியாகிய வடிவுடை அன்னை, வேணுவனத்தில் பரந்த செவியும் அடர்ந்த சடையும் கொண்ட பெருமானின் திருநடனம் காட்சி காண வேண்டி நின்றாள். அம்மையின் தேன்மொழிக்கு இசைந்து, வேணுவனத்தில் எம்பெருமான் எழுந்தருளினார். பூதகணங்களின் தலைவன் பாணுகம்பனின் தலைமையில் ஆயிரக்கணக்கான வாங்கைகளும், சங்குகளும், பேரிகைகளும் முழங்கின. அகத்தியர் யாழ் வாசிக்க, நாரதர் தம்புரா மீட்டிப்பாட, பூதகணங்கள் கருதி மீட்டி இன்னிசை முழங்க, தேவர்கள் பூமழை பொழிந்தனர். இவ்வுலக உயிர்களெல்லாம் உய்யும் பொருட்டு வேய்வனத்துத் தாமிர சபைதனிலே திருநடனம் புரியலானார். முயலகன் மீது ஒரு காலை ஊன்றி, மற்றொரு காலை திசை எட்டும் வீசி ஆடினார். படர்சடை ஆட, கங்கையாட, பிறைச்சந்திரன் ஆட, அரவம் ஆட, காதிற்குழையாட, அணிகலன்கள், ஆட கனல் ஆட, பதமாட, அண்டமெல்லாம் ஆட எம்பெருமான் திருநடனம் செய்து அருள் செய்தார். பிரம்மா, திருமால், இந்திரன், சூரியன், சந்திரன், பூதக்கணங்கள், முனிவர்கள், இசைவித்தகர்கள், புவியில் உள்ள யாவரும் வந்தனையோடு வணங்கி நின்றனர். தாமிரசபை நாதன் அன்னையை நோக்கி அமுதென ஒரு மொழி உரைத்தார்.

 
 


“அருள்தரும் வடிவன்னையே உம்மோடு எப்போதும் பிரியாது இவ்வேணுவனந்தனிலும், தாமிரசபைதனிலும் வீற்றிருக்கும் பெருமை பெற்றோம்” என்றனன். இவ்வாறு விற்கருவி செய்வதற்கேற்ற நீண்ட மூங்கில் வனத்தை உடைய தாமிர சபைதனில் நடனஞ் செய்த காட்சியை எடுத்துரைத்தான் சூதமுனிவன்.

இத்திருநடனக்காட்சி, ஒவ்வொரு ஆண்டும் தாமிர சபைதனில் மார்கழிமாதத் திருவாதிரை நன்னாளில் மிக விமரிசையாக நடைபெறுகிறது.

நடராஜப்பெருமானின் ஐந்தொழிலையும் தனித்தனியாக செய்யும் தாண்டவங்களையும் அவற்றை அவர் இயற்றிய இடம் பற்றியும் திருப்பத்தூ புராணம் கூறுகிறது அதில்,

“தாமிரசபையில் தேவதாருவன நெல்வேலி
ஆடம்பிர பலதலத்தில் ஆற்றதும் முனிநிருத்தம்” – 13
எனக் கூறுகிறது. இது படைத்தல் தொழிலை கூறும் தாண்டவமாகும். இந்த தாமிரசபையானது, அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கல்லாலான பீடத்தின் மீது, மரத்தாலான மண்டபம் செய்யப்பட்டு, அதன் கூரையில் தாமிர தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. பிரமிட் வடிவ தோற்றம் கொண்ட இச்சபை கேரள பாணி கட்டிடக் கலையினை ஒத்துயிருந்ததால், இது கட்டப்பட்ட காலத்தை சரியாக கணிக்க இயலவில்லை. தாமிரசபையின் பின்புறம் சந்தனசபாபதி சந்நிதி அமைந்துள்ளது. அங்கே மூலவராக நடனத் திருக்கோலத்தில் சந்தன சபாபதி அருள் பாலிக்கிறார். அவரின் திருநடனத்தை வியாக்கிரபாரதர், பதஞ்சலி, காரைக்கால் அம்மையார் கண்டுகளிக்கின்றனர். சந்தன சபாபதிக்கு பூசப்படும் சந்தனமானது சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தசி ஆகிய ஆறு சந்தர்ப்பங்களில் களையப்பட்டு புதிதாக மீண்டும் சார்த்தப்படுகிறது.

 
 

 

தாமிரசபையின் முன்புறம் கல்லாலான ஒரு மண்டபம் உள்ளது.அம்மண்டபத்தின் மேற்கூரையானது ஆர்ச் வடிவத்தில் அமைக்கப்பட்டு எவ்வித எட்டுமானப் பொருளும் பயன்படுத்தப்படாமல் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அம்மண்டபத்தின் தூண்களில் அடிப்பகுதியில் அமைந்துள்ள யானை சிற்பங்கள் இம்மண்டபத்தினை தாங்கி நிற்கின்றன.

மார்கழி திருவாதிரை திருநாளில் தாமிரசபைக்கு எழுந்தருளும் உற்சவரான தாமிரசபாபதியின் திருநடனம் இம்மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது. அத்திருநடனக் காட்சியை மகாவிஷ்ணு மத்தளம் இசைக்க,மகாலெட்சுமி, பிரம்மா, சரசுவதி முதலான இறைவர்களோடு பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்களும் தரிசிப்பதை சிறிய புடைப்பு சிற்பங்களாக இம்மண்டப தூண்களில் செதுக்கி உள்ளனர்.

தாமிர சபையின் மேற்வரையில் மரத்தாலான எண்ணிறந்த சிற்பங்கள் உள்ளன. தாமிரசபையில் நடுநாயகமாக அமைந்துள்ள கல் பீடத்தில் வைத்து நடைபெறும். ஆடல் வல்லானின் திருநடனக் காட்சியை கூரையின் முதல் அடுக்கில் செதுக்கப்பட்டுள்ள இறைவனின் திருமூர்த்தங்களும், இரண்டாம் அடுக்கில் செதுக்கப்பட்டுள்ள முனிவர்களும் பார்த்து ரசிக்கின்றனர். இந்த மரச்சிற்பங்களிலேயே இதர திருநடன சபைகளின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. கண்ணப்ப நாயனார் தனது ஒரு காலால் சிவலிங்கத்தின் கண்ணை மிதித்துக் கொண்டு குறுவாளால் தனது கண்ணை கொய்யும் காட்சியும், அதை சிவபெருமான் தடுக்கும் காட்சியும் அற்புத சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

 
 
Copyrights © 2014 Arulmigu Swami Nellaiyappar Temple All Rights Reserved
Site design & Maintained by
Anna silicon